அரியம் உட்படப் பலர் நீக்கம் ; சிவமோகன் இடைநிறுத்தம் – தமிழரசின் மத்திய குழு முடிவு என்கிறார் சுமந்திரன்

0
306

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் ஊடாகக் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகின்றார்கள். அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் சி.சிவமோகன் தமிழரசுக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சியின் உறுப்பினரான சிவமோகன் மீது தேர்தல் காலங்களில் கட்சியினுடைய வேட்பாளர்களை நேரடியாகத் தாக்கி ஊடக சந்திப்புக்களை நடத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவரைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தி விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரியநேத்திரன் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருக்கின்றார். அவரைக் கட்சியிலிருந்து விலக்கலாம் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன், கடந்த தேர்தல்களில்  கட்சிக்கு எதிரான வகையில் வேறு கட்சிகளோடு அல்லது சுயேச்சைக் குழுக்களோடு இணைந்து போட்டியிட்டவர்கள் அனைவரையும் உடனடியாகக் கட்சியில் இருந்து விலக்குவதாக மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது. அவ்வாறனவர்களின் பெயர்கள் எல்லாம் வர்த்தமானியில் உள்ளன.

மேலும், வேறு கட்சிகள் மற்றும் குழுக்களுக்காகப் பிரச்சாரம் செய்தவர்கள் மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக ஜனாதிபதித் தேர்தலில் பிரச்சாரம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. ஏனையவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here