2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற மிலேச்சதனமான பயங்கரவாத தாக்குதல்களினால் இந்த நாட்டின் 267 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 500 பேர் வரையில் காயமடைந்தனர் என்பதனை நாம் அறிவோம்.
இந்த தாக்குதல் நடாத்தப்பட்டு மூன்றாண்டு காலம் நிறைவடைய உள்ள நிலையிலும், இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படுவதாக தென்படவில்லை.
இதனால் இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாரதூரமானதும் நியாயமானதுமான சந்தேகம் சமூகத்தில் எழுந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் சுமார் மூன்றாண்டு காலமாக உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு, தங்களது வாழ்க்கைத் துணைக்கு, தங்களது பிள்ளைகளுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரி, அழுது புலம்பி நீதி தேவதையிடம் எதிர்பார்ப்பு ஒளியேற்றி காத்திருக்கின்றார்கள் என்பது எமக்குத் தெரியும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை ஈரமாக்கிய கண்ணீருக்கு நியாயம் வழங்கக்கூடிய வகையில் ராஜபக்ச அரசாங்கம் செயற்படும் என நம்பக்கூடிய நிலைமைகள் எதுவும் கிடையாது என்பது தெளிவாகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மெய்யாகவே பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவிய தீவிரவாதிகளை சட்டத்தின் முன்கொண்டு வருதல் அல்லது சமூகத்திற்கு வெளிப்படுத்துவது இன்றளவிலும் காலம் தாமதிக்கப்படுகின்றது.
எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதனை உதாசீனம் செய்தல் மற்றும் தாக்குதலுடன் தொடர்புடைய மெய்யான குற்றவாளிகள் யார் என்பதனை கண்டறியும் நோக்கில் விசாரணை நடாத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கைது செய்தல் மற்றும் சிறையில் தடுத்து வைத்தல் என்பது அரசாங்கத்தின் குறுகிய அரசியல் நோக்கமுடைய தீர்மானம் இல்லை என்பதனை நிரூபிக்க எவ்வித வலுவான சான்றுகளும் கிடையாது.
இதன்படி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதற்கு பதிலாக தாக்குதலின் மெய்யான குற்றவாளிகளை கண்டறியும் நோக்கில் விசாரணை செய்த அதிகாரிகளை வேட்டையாடுதல் ஈஸ்டர் தாக்குதலை விடவும் பயங்கரவாதமானது.
மிலேச்சத்தனமானது, கொடூரமானது. எனவே இந்த அவசர குறுகிய அரசியல் பிரயோகத்தை நிறுத்துமாறு நாம் வலியுறுத்துகின்றோம்.
ஷானி அபேசேகரவின் மீது கை வைக்காதே!
எமக்கு தெரிந்த வகையில் ஷானி அபேசேகர சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்திய அரசாங்க அதிகாரியாவார்.
தனக்கு வழங்கப்பட்ட மிகவும் சவால் மிக்க விசாரணைகளுக்கு விடை பெற்றுக் கொடுத்த அதி சிறந்த அதிகாரியாவார். எந்தவொரு அரசாங்கத்தின் ஆட்சியின் கீழும் தனக்கு வழங்கப்பட்ட பணிகளை சட்டத்தின் பிரகாரம் நேர்மையாகவும், தைரியமாகவும் செய்தார் என்பது பக்கச்சார்பற்றவர்களுக்கு தெரியும்.
எவ்வாறெனினும் இவ்வாறான அரச உத்தியோகத்தர் ஒருவரின் சேவையை பாராட்டுவதற்கு பதிலாக அவரை மீண்டும் மீண்டும் சிறையில் அடைப்பது, திட்டமிட்ட அடிப்படையில் அவரை இயற்கை மரணத்தினை நோக்கி தள்ளுவதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இது அவ்வாறானால் இந்த நிலைமையானது மிகவும் பாரதூரமானதும் ஆபத்தானதுமாகும்.
அவரை பழிவாங்கும் நோக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளைக் கூட மாற்றியதுடன் உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தனக்கு பாதுகாப்பினை வழங்குமாறு ஷானி அபேசேகர உயர் நீதிமன்றில் கோரியுள்ளார்.
இதன்படி, தனது விசாரணைகளுக்கு இராணுவ மற்றும் புலனாய்வு பிரிவுகளைச் சேர்ந்த சில அதிகாரிகள் இடையூறு விளைவித்தனர் என்பதுடன், தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல்தாரிகள் குறித்த விசாரணைகளை திசை திருப்பியதாக ஷானி அபேசேகர தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மக்களின் எதிர்ப்பு காரணமாக உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிப் பதிவு ஆவணங்கள் அனைத்தும் நாடாளுமன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தனது கடமைகளை செய்வதற்கு பல்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்தப்படவில்லை என்றால் இதனை விடவும் சிறந்த விசாரணை அறிக்கை ஒன்றை வழங்கியிருக்கக் கூடிய சிறந்த அதிகாரியாக ஷானி திகழ்கின்றார் என்பதனை இந்த அறிக்கைகளை பார்வையிடும் எவராலும் புரிந்து கொள்ள முடியும்.
உண்மையில் ஷானியை கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ வேண்டியதில்லை, அவரது விசாரணைக்கு இடையூறு விளைவித்த இராணுவ அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லவா?
ஷானி அபேசேகர மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் மூலம் உரிய முறையில் கடமையாற்றும் அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் தங்களது பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் சமிக்ஞையாகவே கருதப்பட வேண்டும்.
இவ்வாறு தேவைவயற்ற அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் அனைத்து நேர்மையான உத்தியோகத்தர்களையும் அரசாங்கத்தின் அடிமைகளாக மாற்றுவதே இவர்களின் அபிலாஷையாகும்.
எம் அனைவரையும் அடிமைகளாக்கி பலம்பொருந்திய அரசியல்வாதியின் அனுசரணையுடனும் அனுமதியுடனும் மட்டும் வேலை செய்யும் ஒர் சூழ்நிலையை உருவாக்குவதே இதன் மூலம் இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
இந்த தீர்மானம் மிக்க நேரத்தில் நாம் அனைவரும் ஷானி அபேசேகரவுடன் கைகோர்த்து இருக்க வேண்டிய கடப்பாட்டின் அவசியம் உணர்த்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல. அவர்கள் வெறும் பொறுப்பாளர்கள் மட்டுமே.
சட்டத்தின் பிரகாரம், தனது மனச்சாட்சிக்கு இணங்க கடமைகளை நிறைவேற்றும் வினைத் திறனான அரச உத்தியோகத்தரை அழுத்தங்களுக்கு உட்படுத்துவதன் மூலம் மக்களின் பரிசுத்தமான நம்பிக்கையை இவர்கள் சிதைக்கின்றார்கள்.
எனவே இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்திக் கொள்ளுமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
ஷானி அபேசேகரவிற்கு செய்யப்படும் துன்புறுத்தல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.
குறுகிய அரசியல் நோக்கங்களை களைந்து உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் சூத்திரதாரிகளை கண்டு பிடிப்பதற்கு அரச வளங்களை பயன்படுத்த வேண்டுமென நாம் பரிந்துரை செய்கின்றோம்.
நன்றி
ரெடிக்கல் நிலையம்
ஜயனி அபேசேகர – ஹரேந்திரன் கிருஷ்ணசாமி – கேஷால் ஜயசிங்க – சி.எஸ். கொடிதுவக்கு –
fப்ரோ பாருக்
2022-02-25