இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தற்செயலான நிகழ்வு என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு மத்திய அரசு, இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இலங்கை அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டருந்த காரைக்கால் மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை கைது செய்தது. இதில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இலங்கை விளக்கம் கொடுத்துள்ளது. அதில், இந்திய மீனவர்கள் தாக்க முற்பட்டபோது தற்செயலாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும்போது மீனவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தாக்க முற்பட்டபோது தற்செயலாக இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதலில், 2 மீனவர்கள் லேசான காயம் அடைந்ததாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.