எனது நாட்டு மக்கள் அனைவரையும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதே எனது கனவாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
போதைப்பொருள் மற்றும் அதற்கான சந்தை இன்று உலகளாவிய ரீதியில் பல பிரைச்சினைகளை உருவாக்கி வருகின்றது.
போதைப்பொருள் வர்த்தகம், நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு அவை உலகளாவிய அரசியலுக்கும் சுகாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
அதேவேளை, உலகளாவிய நன்நடைத்துக்கும் அது அச்சுறுத்தலாக அமைக்கின்றது. போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு நான் உங்கள் அனைவரையும் உலகளாவிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
இதேவேளை, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக இருப்பதோடு அது ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படுகின்றது என்பதை நாம் நம்புகின்றோம்.
அத்துடன், ஊழல், வறுமைக்கும் வழிவகுக்கின்றது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஆபத்தான ஒரு விடயமாக இருந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் அதனை விட ஆபத்தானது.
இதேவேளை, மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனம் மனித இனத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி ஆகும். மனித நாகரிகத்தின் வெற்றிகள், ஓரிரவில் நடப்பது அல்ல. அவை பல்வேறு தியாகங்களின் விளைவுகள் ஆகும்.
அதேபோல, ஊழலுக்கு எதிரான முதலாவது படி கடினமாக இருந்தாலும் அதனைத் தொடர்ந்து 1,000 இலகுவான படிகள் வரும் என்பதில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
நான் 22 மில்லியன் மக்களை கொண்ட ஒரு தீவை பிரதிநித்துவப்படுத்துகின்றேன். எமது நாட்டின் சனத்தொகை உலகின் 0.3 சதவீதமே ஆகும்.
நாங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளோம். இதேவேளை, நாம் உலகளாவிய ரீதியில் நடைபெறும் யுத்தங்களை கண்டிக்கின்றோம்.
அதில் நீங்கள் அனைவரும் இணைந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். எந்த நாடும் போரை விரும்புவதில்லை. உலகில் எங்கு போர் நடந்தாலும் போரின் விளைவு துயரம் ஆகும்.
3 தசாப்த போரை எதிர்கொண்ட நாடாக போரின் துயரத்தை நாம் நன்கு அறிவோம். போரால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டோரின் பெற்றோர், மனைவிமார் மற்றும் குழந்தைகள் இன்னொரு போரை விரும்ப மாட்டார்கள்.
ஒரு சிறந்த ஆட்சியாளர் உயிர்களை காப்பற்றுவாரே அன்றி அவர் ஒருபோதும் உயிர்களை அழிப்பதற்கு எண்ண மாட்டார். காசா இன்று குழந்தைகளினதும் அப்பாவி மக்களினதும் அழுகுரல் ஒலிக்கும் இடமாக மாறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையும் உரிய தரப்பினரும் போர்நிறுத்ததை ஏற்படுத்த முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதோடு காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் வழங்க வேண்டும்.
மதவாதமும் இனவாதமும் போரை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன. மில்லியன் கணக்கான குழந்தைகள் உலகில் பசியால் இறக்கும் அதேவேளை நாம் ஆயுதங்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழித்து வருகின்றோம்.
மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு பொருளாதார காரணங்களால் கல்வி நிராகரிக்கப்படும் அதேவேளை, பில்லியன் கணக்கான பணம் இன்னொரு நாட்டை ஆக்கிரமிப்பு செய்ய செலவிடப்படுகின்றது.
3 தசாப்த போருக்கு முகங்கொடுத்த எமக்கு அதற்கு எதிராக குரல் கொடுக்க உரிமை உள்ளது.
இதேவேளை, எனது நாடு தொடர்பாக எனக்கு சில கனவுகள் இருப்பதோடு உங்கள் அனைவரின் நாடுகள் தொடர்பாக உங்களுக்கும் சில கனவுகள் இருக்கும்.
எனது நாட்டு மக்கள் அனைவரையும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதே எனது கனவாகும் என்று தெரிவித்துள்ளார்.