பல முக்கிய நகரங்களில் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, உள்நாட்டு – வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான இந்தப் பிரதான நகர அபிவிருத்தியை, நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் முதலாம் கட்டத்தின் கீழ் காலி, பண்டாரவளை, இரத்தினபுரி மற்றும் திம்பிரிகஸ்யாய, கோட்டை, புறக்கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட விசேட பொருளாதார வலயங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
புதிய திட்டத்தில் பாரிய வீதிகள், வாகன தரிப்பிட வசதிகள், நடைபாதைகள், வர்த்தக நிலையங்கள், சூரிய சக்தியில் இயங்கும் ஔி விளக்குகள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
திட்டங்களை அமுல்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட நகரங்களை அண்மித்துள்ள வரலாற்றுச் சின்னங்களும் பழமை வாய்ந்த கட்டிடங்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.