டிட்வா சூறாவளி புயலால் சேதமடைந்த வீடுகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்காக தற்போது மாவட்ட செயலாளர்கள் ஊடாக தேவையான நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வீடமைப்பு, கட்டுமான மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
மேலும், பேரிடரால் பாதிக்கப்பட்ட நீர்வழங்கல் பணிகளில் 95 சதவீதம் தற்போது சீரமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வீடமைப்பு, கட்டுமான மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் பல திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வெளிநாட்டு கடன்கள் மற்றும் உதவித் தொகைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்களாகும்.
இத்திட்டங்களை அறிவியல் முறையில் மதிப்பீடு செய்து, தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காகவும், அமைச்சின் கீழ் உள்ள திட்டங்களை பயனுள்ள மற்றும் நிலையான அபிவிருத்திக்காக பயன்படுத்தும் நோக்கில் தன்னார்வ பொறியியல் ஆலோசகர்கள் நியமிக்கும் நிகழ்வு அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தலைமையில் நேற்று (22) நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டு அதிக பணிகள் நிறைந்த ஆண்டாக இருக்கும் எனவும், அதற்காக ரூ. 500 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிறந்த நாட்டை உருவாக்கும் நோக்கில் செயல்பட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
