இலங்கையை உட்பட பல நாடுகளில் பெரும் உயிர் மற்றும் சொத்துச் சேதங்களை ஏற்படுத்திய 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு நிகழ்ந்து இன்று (டிசம்பர் 26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அந்த பேரழிவில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் பொருட்டு, 2005 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இவ்வருட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு இன்று காலை பேரலியா சுனாமி நினைவுச் சின்ன வளாகத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தேசிய பாதுகாப்பு தினத்தின் போது, சுனாமி பேரழிவில் மட்டுமல்லாமல், பிற பேரிடர்களில் உயிரிழந்தவர்களையும் நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. மேலும், மாவட்ட மட்டத்தில் பல்வேறு மதங்களை உள்ளடக்கிய சமய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2004 டிசம்பர் 26 அன்று இந்தோனேசியாவை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உருவான சுனாமி அலைகள் இலங்கையின் 13 கரையோர மாவட்டங்களை கடுமையாக பாதித்தன. கடல் நீர் கரைபுரண்டு புகுந்ததால், சுமார் 50,000 இலங்கையர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
மேலும், சுமார் 5,000 பேர் காணாமல் போனதாகவும், வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் உட்பட மொத்தமாக 502,456 பேர் இந்த பேரழிவால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
