சந்தேகத்திற்குரிய ஒண்டான்செட்ரோன் (Ondansetron) ஊசி தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொற்றுநோய் நிறுவகத்தில் (National Institute of Infectious Diseases) சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த ஊசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படும் இரு நோயாளிகளின் உறவினர்கள் இந்தப் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
“சுகாதார அமைச்சு, அந்த இரு நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது எந்தவிதமான உயிர்க்கொல்லி நோய்களும் அவர்களுக்கு இல்லை என்று கூறியிருந்தது. எனவே, இப்படியான சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடைபெறாமல் நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால், அது என் மனைவிக்கு செலுத்தப்படும் மிகப் பெரிய மரியாதையாகும்” என, இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான சானக மதுசங்க தெரிவித்தார்.
காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு தேசிய தொற்றுநோய் நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு நோயாளிகள், கடந்த 11 மற்றும் 14 ஆம் திகதிகளில் திடீரென உயிரிழந்துள்ளனர். உயிராபத்தான நிலையில் இல்லாத அந்த நோயாளிகள், ஒண்டான்செட்ரோன் ஊசி பயன்படுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட சிக்கல்களினால் உயிரிழந்தார்களா என்ற கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் அடிப்படையில், தற்போது அந்த ஊசியின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதுடன், அந்த ஊசியை வழங்கிய நிறுவனத்தின் மேலும் 10 மருந்துகளும் தற்காலிகமாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட உயிரிழப்புகள் குறித்த ஊசியின் காரணமாக ஏற்பட்டதா என்பதைக் கண்டறிவதற்காக, தற்போது இரண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
