நந்தன குணதிலக்கவின் திடீர் மறைவால் தாம் ஆழ்ந்த கவலையும் துயரமும் அடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மறைந்த நந்தன குணதிலக்கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இதனை கூறினார்.
நந்தன குணதிலக்க நாட்டின் அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய முக்கியமான அரசியல் ஆளுமையாகவும், மக்களின் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தலைவராகவும் இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அவரது உடல் முன் அரசியல் பேசுவது பொருத்தமற்றது என்றும், அனைவரும் மனித உயிர்களை காக்கும் நோக்கில் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அவருடைய நோய்நிலை குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தால், இன்னும் அதிகமான தலையீடுகளை மேற்கொள்ள முடிந்திருக்கும் என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.
மறைந்த நந்தன குணதிலக்கவுக்கு சிகிச்சையளித்த அனைத்து மருத்துவர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்த அவர், எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எவ்வகை கருத்துக்களை வெளிப்படுத்தினாலும், மனித உயிரின் மதிப்பு உயர்ந்தது என வலியுறுத்தினார்.





