கல்வி அமைச்சு மற்றும் அறநெறிப் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்குமார் கல்வி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, புத்தபெருமானின் வாழ்க்கை மற்றும் பௌத்தத்துடன் தொடர்புடைய பல்வேறு ஸ்தலங்கள் மற்றும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வினா விடைப்போட்டி ஒன்றை இலங்கையில் ஆரம்பித்துள்ளது.
14 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்காக இலங்கையில் நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 800 பிரிவேனாக்களில் இப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வினா விடைப்போட்டியானது மூன்று சுற்றுக்களாக நடைபெறுவதுடன் இதில் பிரிவேனா மட்டத்திலான முதல் சுற்று 22 ஆம் திகதி டிசம்பர் 2021 அன்று நடைபெற்றது, இரண்டாவது சுற்று 27ஆம் திகதி டிசம்பர் 2021 அன்று மாகாண மட்டத்தில் நடைபெற்றது.
அத்துடன் தேசிய அளவிலான மூன்றாவது சுற்று 29ஆம் திகதி டிசம்பர், 2021 அன்று நடைபெறும். மூன்றாம் சுற்றுக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று வெற்றியாளர்களுக்கான பெறுமதிமிக்க பரிசில்களுடன், வெற்றியாளர்கள் தமக்கான துணை ஒருவருடன் இந்தியாவின் பௌத்த தலங்களுக்கு பயணிப்பதற்கான ஐந்து நாட்கள்
சுற்றுப்பயணமும் அடங்கும். அறநெறிப் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்குமார் கல்வி இராஜாங்க அமைச்சினால் ஒருங்கிணைக்கப்பட்ட இவ்வினாவிடைப் போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது சுற்றுக்களில் போட்டியாளர்கள் உற்சாகமாக பங்கேற்றதைக் காணமுடிந்தது.
புத்த பெருமானின் போதனைகளின் விலைமதிப்பற்ற பரிசானது உலகம் முழுவதும் பரவுவதற்கு காரணமான பூமியாக இந்தியா ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இன்று, பௌத்த பாரம்பரியம் இந்தியாவிற்கும் ஏனைய பலநாடுகளுக்கும் இடையே ஒரு முக்கியமான நாகரீக பிணைப்பை உருவாக்குகிறது. இந்த அனைத்து நாடுகளில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிடமிருந்து பௌத்தத்தை பரிசாகப் பெற்ற முதல் நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இலங்கைக்கு மிக முக்கியமானதும் சிறப்பானதுமான இடமுள்ளது. இந்த வினாவிடைப் போட்டி, நமது பகிரப்பட்ட பௌத்த கலாசார பாரம்பரியத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளினதும் மக்களுக்கு இடையிலான பிணைப்பை ஆழப்படுத்துவதற்கும் உதவும்.
பௌத்த மதம் சார்ந்த விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை வலுவாக்க இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில், பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விசேட நிதி ஒதுக்கீட்டினை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக
இறுதித்தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றமை ஒக்டோபர் 2021 இல் புனித ‘வப் போயா’ நாளில் புனித நகரமான குஷிநகருக்கு இலங்கையிலிருந்து அங்குரார்ப்பண விமானத்தை வரவேற்றமை; ஒக்டோபர் 2021இல் வஸ்கடுவாவின் இராஜகுரு ஸ்ரீ சுபூதி மஹா விஹாரையிலிருந்து புனித கபிலவஸ்து புத்த சின்னங்கள் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட திட்டங்கள் உள்ளடங்குகின்றன.
கொழும்பு
27 டிசம்பர் 2021