மத்திய மாகாண ஆளுநர் மற்றும் நீர்கொழும்பு மாநகர முதல்வர் ஆகிய இருவருமே தங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
மத்திய மாகாண ஆளுநராகப் பதவி வகித்த பேராசிரியர் சரத் அபேகோன் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.
தனது தனிப்பட்ட காரணத்திற்காகவே இப்பதவியில் இருந்து விலகுவதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் சரத் அபேகோன், மத்திய மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய புகழ்பெற்ற ஒரு கல்வியாளர் ஆவார்.
ஆளுநரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது காலியாக உள்ளதால், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக தற்காலிக ஆளுநர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதியாக நீர்கொழும்பு மாநகர சபையின் முதல்வராகப் பதவி வகித்த ரொபர்ட் ஹீன்கெந்த அதிகாரப்பூர்வமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவரும் தனது பதவி விலகலுக்குத் தனிப்பட்ட காரணங்களையே குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞரான ரொபர்ட் ஹீன்கெந்த, இதற்கு முன்னர் சில சந்தர்ப்பங்களில் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து பின்னர் அந்த முடிவை மாற்றியமைத்திருந்தார். எனினும், ஜூலை 15 தனது ராஜினாமா கடிதத்தை அவர் அதிகாரப்பூர்வமாக கையளித்துள்ளார்.
திசைகாட்டி அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர், மாகாண மற்றும் உள்ளூர் நிர்வாகக் கட்டமைப்புகளில் நிகழ்ந்து வரும் முக்கிய மாற்றங்களுக்கு மத்தியில் இந்த இரு முக்கிய ராஜினாமாக்களும் ஒரே நாளில் நிகழ்ந்துள்ளன.
