22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தலைமையிலான “ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள்” அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இந்தத் திருத்தம் அரசியலமைப்பின் 03ஆவது உறுப்புரைக்கு இணங்காததால், அதனை மக்கள் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள லால் விஜேநாயக்க, 22ஆவது திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பை அரசாங்கத்துக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் மோதலாக மாத்திரம் சித்தரிப்பது மக்களைத் தவறாக வழிநடத்துவதாகும் எனத் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் சுயாதீனத்திற்கான போராட்டம் அதைவிட மிகவும் விரிவானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாகவும் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலும் மக்கள் நடத்திய போராட்டங்களின் மூலம் பெற்றுக்கொண்ட நாகரிகமான சமூகத்தில், நாகரிகமான குடிமக்களாக வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டமே இது என்றும் லால் விஜேநாயக்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
