தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் மருத்துவ நிலைமை தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியமைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (15) அழைப்பாணை விடுத்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ அறிக்கைகளை ஏன் சமர்ப்பிக்கவில்லை என்பதற்கான காரணங்களை முன்வைக்க, எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் இருந்தபோது ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டுமா என்பது தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அந்த அறிக்கை இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையிலேயே வைத்தியசாலை பணிப்பாளருக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
