சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நவம்பர் 3ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது!

0
25

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நவம்பர் 3ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (30) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

“எதிர்க்கட்சியினரால் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறாத வகையிலும், அவற்றுக்கு இணங்கும் வகையிலும் திருத்தி சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரினோம்.

இதற்கு முன்னர் சபாநாயகர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய பிரேரணையை நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்ப தயாரிக்குமாறு எதிர்க்கட்சியினரிடம் கேட்டுக்கொண்டோம்.

அதன்படி, ஒக்டோபர் 28ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பிரேரணையை நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்ப திருத்திச் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தோம். எனினும், எதிர்க்கட்சியினர் அதனை உரிய முறையில் திருத்திச் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது.

நாடாளுமன்றம் தனது சொந்த நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும்.

சபாநாயகர் பதவி என்பது நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான தலைமைப் பதவியாகும். எனவே, ஜனாதிபதி, பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் சபாநாயகர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என்பது தொடர்பில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 83இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள விடயங்கள் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைத் தயாரித்து சமர்ப்பிப்பது தொடர்பான விடயங்கள் நிலையியற் கட்டளை 91இல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான தீர்மானங்களை எடுத்து, நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் இணைப்பதற்கான அதிகாரம் நாடாளுமன்றக் குழுவுக்கே உள்ளது.

எதிர்க்கட்சியினர் பிரேரணையை உரிய முறையில் திருத்திச் சமர்ப்பிக்காத காரணத்தினால், நவம்பர் 3ஆம் திகதிக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் முழுமையாக மாற்றப்பட்டு, அன்றைய தினம் ஒத்திவைப்பு விவாதம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here