ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும் அவரால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்ட முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மைக்கு தேவையான 113 ஆசனங்களை பூர்த்தி செய்ய எம்.பி.க்களை பணத்திற்கு வாங்கும் பணி ஏற்கனவே துவங்கிவிட்டதாக கூறிய அவர், எம்.பி.க்கான ஆரம்ப ஏலத்தொகை 10 கோடி எனவும் குறிப்பிட்டார்.
113 பேரில் 13 உறுப்பினர்களின் ஆதரவு கூட இல்லாத பின்னணியில் விக்கிரமசிங்க எப்படி அரசாங்கத்தை நடத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த காலங்களில் ராஜபக்சக்களுடன் சேர்ந்து பல பில்லியன்களை சம்பாதித்த வர்த்தகர் ஒருவர் தற்போது இலங்கைக்கு டொலர்களை கொண்டு வந்து எம்.பி.க்களை கொள்வனவு செய்ய பணத்தை செலவழிக்க முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் இல்லாத இலங்கையை உருவாக்க வேண்டும் எனவும், என்ன நடக்கிறது என்பது குறித்து இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.