21வது திருத்தச் சட்டம் குறித்து இன்று சட்ட மா அதிபரை சந்திக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
செய்யப்பட வேண்டியவை மற்றும் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவை என நிறைய விடயங்கள் உள்ளன. நாம் முக்கியத்துவத்தின் அடிப்படையில் விடயங்களை முதன்மைபடுத்துகின்றோம்.
ஏனையவை வெகுவிரைவில் கவனத்தில் கொள்ளப்படும் என உறுதியளிக்கின்றோம். கடந்த 48 மணித்தியாலங்களாக விடயங்கள் முன்னோக்கி நகரும் வகையில் செயற்பட்டுள்ளோம். நாடு முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஒரு முழுமையான விளக்கத்தை இன்று (16) தருகிறேன்.
எரிபொருள் : வங்கிகளில் நிலவும் டொலர்களுக்கான தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, எதிர்வரும் வாரம் எரிபொருள் கொள்வனவிற்காக செலுத்தவேண்டிய நிதியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வேறு வழிகள் குறித்து ஆராய்கின்றோம்.
சமையல் எரிவாயு : அரசாங்கம் சமையல் எரிவாயு தொகுதியொன்றுக்கு செலுத்தவேண்டிய கட்டணத் தொகையை பெற்றுள்ளது. கூடிய விரைவில் அந்த எரிவாயு தொகுதி இறக்கப்பட்டு விநியோக நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
மருத்துவ மருந்துகள், உணவு, பசளைகள் : இன்று நடைபெற்ற எமது சந்திப்பின் இறுதியில், அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான உதவிகளை வழங்க உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் உறுதியளித்துள்ளன.
21 ஆவது திருத்தம் : இது இன்று சட்டமா அதிபர் திணைக்களத்துடனான கலந்துரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், பின்னர் அமைச்சரவையில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.