Wednesday, May 8, 2024

Latest Posts

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது ; வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தாண்டு அமையும்!

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 எனும் புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கின்றோம்.

முன்னெப்போதும் இல்லாதவாறு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாரிய சுமை மற்றும் நம்மில் பெரும்பாலானோர் சந்தித்த பின்னடைவு ஆகியவற்றை நான் நன்கு அறிவேன். எனினும், நாம் ஏற்கனவே நெருக்கடியான நிலையைக் கடந்துவிட்டதாக கருதுகின்றேன். 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும்.

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த ஏனைய நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நாம் இன்னும் அடையத் தவறிவிட்டோம். நாட்டில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் தற்போதுள்ள அரசியல் முறைமையில் மாற்றம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையைப் புறக்கணிக்க முடியாது. எதிர்வரும் தசாப்தத்திற்குள் வளமான இலங்கையை கட்டியெழுப்ப உத்தேசித்துள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நாம் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வேலைத்திட்டத்தில் நாட்டை முன்னிலைப்படுத்தி, அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் தீர்க்கமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய நம்பிக்கைகளுடன் நாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைய வேண்டுமென பிரார்த்திப்பதுடன் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.