கண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கலஹா தெல்தோட்டை குறூப், கலஹா நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது.
இத்தோட்டத்தில் 400 தொழிலாளர் குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கே இவர்கள் பரம்பரையாக வாழும் 20 தொடர் குடியிருப்புகள் 1920 மற்றும் 1935 காலப்பகுதியில் கற்களையும் மண்ணையும் கொண்டு கட்டப்பட்டவை. ஓடுகளையும் மரங்களையும் கொண்டு அமைக்கப்பட்ட மூன்று தொடர் குடியிருப்புகள் பழுதான நிலையில் உள்ளன.
ஏனைய தொழிலாளர் குடியிருப்புகளின் கூரைகள் தகரம் மற்றும் அஸ்பெஸ்டஸ் கொண்டு அமைக்கப்பட்டவை.
இக்குடியிருப்புகளின் கூரை மரங்கள் உக்கி செல்லரித்து காணப்படுகின்றன. இதனால் கூரை தாழிறங்கியும் உயர்ந்தும் ஒழுங்கற்று காணப்படுகின்றன. தகரங்கள் துருப்பிடித்தும் ஓடுகள் கழன்றும் உள்ளன.
மிகப் பழமையான ஆங்கிலேயர் காலத்து உறுதியும் கனமும் கொண்ட ஓடுகள். கூரை மரங்கள் மற்றும் கூரை சட்டங்கள் உக்கி செல்லரித்து உள்ளமையால் கூரை ஓடுகள் கழன்று வீட்டுக்குள் விழுகின்றன. காகங்கள் போன்ற சிறிய பறவைகள் கூரையோடுகளில் அமரும்போது ஓடுகள் வீழ்கின்றன. கூரையின் ஓட்டையூடாக ஒழுகும் மழைநீர் வயர்களுக்குள் நுழைவதால் மின் ஒழுக்குகள் அடிக்கடி ஏற்பட்டு மின்சார உபகரணங்கள் பழுதடைகின்றன. குடியிருப்புகள் தீப்பற்றும் நிலையில் உள்ளன என்றால் மிகையாகாது.
ஓடுகள் கழன்று தலையில் வீழ்ந்து மண்டை உடைபட்ட பல சந்தர்பங்கள் உள்ளன. சிறுவர்கள் முதியவர்கள் நோயாளிகளை வீட்டில் விட்டுவிட்டு செல்லமுடியாது அச்சமாக உள்ளது. கரையான் கூடுகளாக கூரைமரங்கள் உள்ளன. கரையான் மற்றும் கரையான்மண் உணவில் விழுவதாகச் சொல்கிறார்கள்.
கரையானை திண்ண பல்லியும் பல்லியை பிடிக்க பாம்பும் கூரைக்கு வருகின்றன. இங்கே மலசலகூட வசதியில்லை. மலசலகூடம் கட்டிக்கொள்ள இடமில்லை. கட்டுவதற்கான இடமிருந்தால் பணம் இல்லை.
தாம் பயன்படுத்திய கழிவுநீரை வெளியேற்ற வடிகான் வசதி இல்லை. சட்டிப்பானை கழுவிய நீரையும் தூக்கி தூர இடத்திற்கு எடுத்துச் சென்று கொட்ட வேண்டியுள்ளது. இது தொடர்பாக தோட்ட நிர்வாகமோ, அரசோ நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது. குடிநீர் விநியோகம் சீராகவோ முறையாகவோ இல்லை. வருமானம் போதியதாக இல்லை என்பதால் கூரையை தம்மால் மாற்ற முடியாது என்கிறார்கள் இக்குடியிருப்பாளர்கள்.
இத்தோட்டம் 1000 ஏக்கர் தேயிலை பரப்பைக் கொண்டிருந்தது. கடந்த 25 வருடங்களாக திட்டமிட்ட வகையில் சிறிதுசிறிதாக முழு தோட்டமும் காடாக்கப்பட்டு விட்டன. 1000 ஏக்கர் தேயிலை காணி இருந்த இடத்தில் வெறும் 300 ஏக்கர் தேயிலை காணிகள் மட்டுமே உள்ளன. சகல வசதிகளையும் கொண்ட தெல்தோட்ட குறூப் தேயிலை தொழிற்சாலையானது கடந்த 15 வருடங்களாக மூடப்பட்டுள்ளது.
தேயிலை தொழிற்சாலையை திறக்க பல போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்ட போதும் பயனில்லை. குறைந்தபட்சம் இந்த தொழிற்சாலையில் வேறு தொழில்களை ஆரம்பித்து இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும்.