அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒவ்வொரு நேரத்திற்கு வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அரசாங்கத்தில் ஒருவர் இராஜினாமா செய்யப்போவதாக கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் செய்ய வேண்டியது முழு அரசாங்கமும் விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் நிதியுதவியினால் நிர்மானிக்கப்பட்ட கெத்தாராம ஸ்ரீ சித்தார்த்த பௌத்த அறநெறி பாடசாலையின் “யசஸ்ஸி பியஸ” கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றும் போது, அரசாங்கத்தின் பிரதானிகள் மற்றவர்கள் மீது விரல் நீட்டி தவறுகளை மற்றவர்கள் மீது சுமத்தி தான் நல்லவர் என காண்பிக்க முயற்சிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த நாட்டை அதள பாதாளத்தை நோக்கி தள்ளியதன் பொறுப்பை தனி நபர்களன்றி முழு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இவர்கள் அனைவரும் நாட்டுக்கு இழைத்தது கூட்டு அழிவாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், போலியானவர்களை வெற்றி பெற செய்ததன் விளைவை முழு நாடும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.