அரிசியின் விலையை கட்டுப்படுத்தி விவசாயிக்கு உத்தரவாத விலையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சதொச மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் அறுவடையை கொள்வனவு செய்து அரிசியை உற்பத்தி செய்து விநியோகிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரம் ஓயா மடுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச நெல் களஞ்சியசாலைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் அரிசி உற்பத்தியில் கிட்டத்தட்ட 30% பெரிய ஆலைகளால் வாங்கப்படுவதாகவும், மீதமுள்ள பொருட்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளால் வாங்கப்படுவதாகவும், சந்தையில் உள்ள சமத்துவமின்மையைக் குறைக்க அரசாங்கம் அரிசியை வாங்குவதற்கும் முயற்சித்து வருவதாக அமைச்சர் கூறினார்.
இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்ட அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் 86,000 மெற்றிக் தொன் அரிசியை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதேவேளை, இறக்குமதி வரம்பு எதிர்வரும் 10ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும், அதன் பின்னர், இறக்குமதி சுதந்திர வரம்பு நீக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அரிசி சந்தை மாபியாவை தோற்கடிக்க அரசாங்கம் தலையிடும் என ஜனாதிபதி கடந்த நாட்களில் வலியுறுத்தினார்.