Sunday, May 5, 2024

Latest Posts

ரணிலை நம்பவே முடியாது!

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயம் அரசியல் ரீதியானது என்பது வெளிப்படை. ஐனாதிபதியின் வருகையால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது. தானே கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றிலே பறக்க விட்டுவிட்டு இங்கு வந்து புதிதாக வாக்குறுதிகளைக் கொடுக்கும் ஒருவரை நாங்கள் நம்புவது மிகக் கடினமானது.”

  • இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஐனாதிபதியின் வடக்கு விஐயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐனாதிபதியின் வடக்கு விஐயம் தொடர்பில் தெற்கில் இருக்கும் கட்சிகள் கூட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருக்கின்றன. குறிப்பாக அவர் மக்களுடைய பணத்தைச் செலவழித்து வீணாக வடக்குச் சென்று இருக்கின்றார் என்றும், இதனால் மக்களுக்கு எதுவும் கிடையாது என்றும் பல குற்றச்சாட்டுகளை அந்தக் கட்சிகள் முன்வைத்திருக்கின்றன.

அரசியல் நோக்கமாகவேதான் அவர் இங்கு வந்திருக்கின்றார் என்பது உண்மையிலேயே எல்லோருக்கும் தெரியும். அவருடைய செயற்பாடுகளும் அதனையே வெளிப்படுத்தி இருக்கின்றன.

ஆனால், எங்களுக்கு இதில் மன வருத்தத்தைத் தருகின்ற விடயம் என்னவென்றால் அரசியல் ரீதியாக சில நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்தபோது அதைத் தருகின்றோம், இதைத் தருகின்றோம் என்றெல்லாம் எங்களுக்கு அவர் கூறியிருந்தார். ஆனால், இங்கே வந்திருந்து பொருளாதார முன்னேற்றம் தொடர்பாகவும், அபிவிருத்தி வேலைத்திட்டம் சம்பந்தமாகவும் அவர் பேசி இருக்கின்றார். அதுவும் எங்களிடத்தே சொல்லியது போல் மக்களிடத்தேயும் அதைத் தருவேன், இதைத் தருவேன், அதைச் செய்வேன் என்பதாக அவர் சொல்லியிருக்கின்றார்.

எனினும், இதற்குரிய பணத்தை எங்கிருந்து எடுக்கப் போகின்றாரோ தெரியவில்லை. பணத்தை எங்கிருந்து, எந்த நாட்டில் இருந்து எடுக்கப் போகின்றார் என்றோ அல்லது இலங்கையில் அவ்வளவு பணம் இருக்கின்றதா என்றோ எனக்குத் தெரியவில்லை.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரையில் சொன்ன வேலைத்திட்டங்கள் அல்லது வாக்குறுதிகள் ஒன்றும் நடைமுறைப்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆகவே, இங்கு வந்து அவர் செல்வதில் எந்தவிதமான நன்மைகளும் நமது மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை.

ஆனால், இந்த அரசைப் பொறுத்தவரையிலோ அல்லது ஜனாதிபதியைப் பொறுத்தவரையிலோ வடக்குக்கான இந்த விஐயம் என்பது பல்ஸை (பல்ஸ்) பார்ப்பதாகத்தான் அமைந்திருந்தது.

இதற்கு என்ன விதமான வரவேற்பு தனக்கு இருக்கும் என அறிவதாகக் கூட அவருடைய விஜயம் அமைந்திருக்கலாம். ஆனால், முன்னரைப் போன்று அவருக்கு ஆதரவு இங்கே இல்லை என்றுதான் நான் நினைக்கின்றேன்.

அவருடைய வருகை அரசியல் ரீதியானது என்பது வெளிப்படை. ஐனாதிபதியின் வருகையால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது.

தானே கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றிலே பறக்க விட்டுவிட்டு இங்கு வந்து புதிதாக வாக்குறுதிகளைக் கொடுக்கும் ஒருவரை நாங்கள் நம்புவது மிகக் கடினமானது.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.