நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதில் பௌத்த பிக்குகள் தடையாக உள்ளார்கள் என்ற தவறான நிலைப்பாடு சர்வதேசத்தின் மத்தியில் காணப்படுகிறது.
அனைத்தையும் எதிர்க்கும் ஒருசில ‘வொயிஸ் கட்’ பிக்குகளினால் இந்த நிலை காணப்படுகிறது. தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபித்து தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன வன்முறையால் இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ளது. இலங்கையில் இரண்டாம் தர பிரஜைகள் என்று எவருமில்லை என்பதை உறுதிப்படுத்துவது தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகச் சட்டமூலத்தில் நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின் போது தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணத்துக்குமான அலுவலக சட்டமூலம்,தேசிய நீரளவை சட்டமூலம் என்பனவற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் என்பது முக்கியமானது. இது இன்று நேற்று ஆரம்பமான பேசுபொருளல்ல, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சியில் யுத்த சூழலின் போது இந்த அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அப்போது நிர்வாக மட்டத்தில் மாத்திரம் அந்தஸ்த்து வழங்கப்பட்டது. தற்போது அரசியலமைப்பின் ஊடாக அங்கீகாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பினால் ஒட்டுமொத்த மக்களும் தற்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். பல ஆண்டுகாலமாக கடைப்பிடித்த தவறான பொருளாதார கொள்கை, இனவாத முரண்பாடுகள் உள்ளிட்ட காரணிகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அரச கட்டமைப்புக்களும் வீழ்ச்சியடைந்தன.
சமூக கட்டமைப்பில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதுடன் பாராளுமன்றத்திலும் ஒற்றுமை,நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஒருசிலரது முறையற்ற செயற்பாடுகளினால் 225 உறுப்பினர்களையும் மக்கள் வெறுக்கிறார்கள். இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.
ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் இன நல்லிணக்கம் சிறந்த முறையில் இருந்தது. ஆனால் தற்போது கிராம புறங்கள் இனம், மதம் மற்றும் அரசியல் ரீதியில் பிளவுப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பது குறித்து புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அண்மையில் ஜனாதிபதி உட்பட மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். ஒரு தரப்பினர் இதற்கு சாதகமாக பேசியுள்ள நிலையில் பிறிதொரு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.
தேசிய நல்லிணக்கத்துக்கு பௌத்த பிக்குகள் எதிராக உள்ளார்கள் என்ற தவறான நிலைப்பாடு சர்வதேசத்தின் மத்தியில் காணப்படுகிறது. அனைத்தையும் எதிர்க்கும் ஒருசில ‘வொயிஸ் கட்’ பிக்குகளால் ஒட்டுமொத்த பிக்குகளும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறார்கள்.
ஆகவே தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்த விசேட கவனம் செலுத்தி தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் இனவாதத்தை விரும்பவில்லை. அமைதியாக வாழும் சூழலுடன் இலங்கையர் என்ற அடிப்படையில் வாழ விரும்புகிறார்கள். ஒருசில அரசியல்வாதிகள் இனவாதத்தை ஒக்சிசன் போல் பயன்படுத்துகிறார்கள். இனவாதத்தை தூண்டி விட்டு அதனூடாக அரசியல் செய்கிறார்கள்.
இனத்தை முன்னிலைப்படுத்தி தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்களம் என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நிலைமை மாற்றம் பெற வேண்டும். பொது கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
உத்தேச தேசிய ஒற்றுமைக்கும்,நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் ஊடாக கிராம சேவகர் பிரிவுகளுக்கு விசேட கடமைகள் பொறுப்பாக்கப்படும்.
நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். எதிர்வரும் வாரமளவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விசேட திட்ட பணிகளை முன்னெடுக்கவுள்ளோம். இலங்கையில் எவரும் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல அனைவரும் இலங்கையர்கள் என்பதை உறுதிப்படுத்துவது இந்த சட்டமூலத்தில் பிரதான எதிர்பார்ப்பாகும் என்றார்.