Saturday, September 14, 2024

Latest Posts

வௌிநாட்டுத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு முதல்வர் விடுத்துள்ள அழைப்பு

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியில் உரையாற்றினார்.

உலகமெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் தமிழ் வணக்கம்.

“தமிழால் இணைவோம்” என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம்.

தமிழுக்குத்தான் அந்த வலிமை இருக்கிறது.

மத மாயங்களையும் சாதிச் சழக்குகளையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்குத்தான் உள்ளது.

அதனால்தான் தமிழால் இணைவோம் என்பதை நமது முழக்கமாகக் கொண்டுள்ளோம்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்லாயிரம் மைல் கடந்தும் இன்று நாம் ஒன்றாகக் கூடி இருக்கிறோம் என்றால் தமிழன் என்ற உணர்வோடு நாம் கூடி இருக்கிறோம். நம்மை நாடுகள் பிரிக்கிறது. நிலங்கள் பிரிக்கிறது. ஆனாலும் மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு.

கழக ஆட்சி அமையும் போதெல்லாம் அது இங்குள்ள தமிழர்களின் ஆட்சியாக மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் அனைத்து மக்களின் அரசாக கழக அரசு செயல்பட்டு வருகிறது.

உங்களில் பலருக்கும் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் இருக்கலாம் ஆனால், தமிழ்நாடு அரசும் நமது அரசு என்று சொல்லிக் கொள்ளும் உரிமை உங்களுக்கு எப்போதும் உண்டு. அதனால்தான் கழக அரசு அமைந்ததும் கடந்த செப்டம்பர் மாதம் அயலகம் வாழ் தமிழர்கள் நலன் காக்கக்கூடிய ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டேன்.

நம்முடைய இனம் ஒரு நிலத்தில் ஒரு நாட்டில் மட்டுமே வாழ்ந்த இனம் அல்ல. உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான்.

எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய் வீடு.

உங்களை அயலகத்துக்கு வாழப் போனவர்களாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதர்களாக அயல்நாடுகளில் இருப்பவர்களாக நினைத்து போற்றக் கடமைப்பட்டுள்ளேன்.

இத்தகைய அயலகத் தமிழர் மேன்மைக்காக தன்னுடைய வாழ்வை ஒப்படைத்தவர்தான் தமிழினத் தலைவர் கலைஞர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நலச்சட்டம் 2011-ம் ஆண்டு மார்ச் 1ஆம் நாள் கழக அரசால் இயற்றப்பட்டுள்ளது. “வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியம்” ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்று அறிவித்தோம்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக நம்மால் அமைக்க முடியவில்லை. அடுத்து வந்த ஆட்சியாளர்களும் இதனை அமைக்கவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்த நமது அரசு ‘வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்பதை ஐந்தே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன்.

இதில் பல்வேறு அறிவிப்புகளைச் செய்தேன். இவை அனைத்துக்கும் சேர்த்து 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில்தான், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ந் தேதி உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடப்படும்.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

கொரோனா என்ற பெருந்தொற்று காலமாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த விழாவை மிகப்பெரிய விழாவாக முன்னெடுத்திருப்போம். கொரோனா என்பதால் அது இயலவில்லை.

ஆனால் பரந்த உள்ளம் கொண்ட நாம், காணொலியில் பெரிய அளவில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். பல நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு பெருமக்கள், பல்வேறு தலைப்புகளில் பேச இருக்கிறீர்கள். உங்கள் அனைவரது உரைகளும் தமிழை தமிழினத்தை தமிழர்களை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். நம்மை பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்குத் தள்ளி, நம்மை இணைக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக உங்களது உரைகள் அமைய வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் பிளவுகளுக்கு வெளிநாடுகள் சென்ற பிறகும் முக்கியத்துவம் தராதீர்கள். ஒருதாய் மக்களாக வாழுங்கள். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள். எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை என்பதைப் போல தமிழை தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள். அரவணைத்து வாழுங்கள். தமிழகத்துக்கு வாருங்கள். உங்களது பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டைக் காட்டுங்கள்.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பண்பாட்டிலும் செழிப்பிலும் மேம்பட்ட இனம் நாம் என்பதை அவர்களை அழைத்து வந்து கீழடியை, ஆதிச்சநல்லூரைக் காட்டுங்கள்.

இங்குள்ள தமிழர்களுக்கு எல்லாமுமாய் இந்த அரசு இருப்பதைப் போலவே அயலகத் தமிழ் மக்களுக்கும் எல்லாமுமாக இந்த அரசு இருக்கும். தமிழர் பண்பாட்டை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய தமிழ் கற்பிக்க ஒன்றாக இணைந்து ஒருவருக் கொருவர் உதவியாக இருக்க அனைத்தையும் தமிழ்நாடு அரசு நிச்சயம் செய்யும்.

இவ்விழாவில் இணைய வழியாக கலந்து கொண்ட டாக்டர். தனபால் ராமசாமி, ராஜா நடராஜன், மொரிஷியஸ் முன்னாள் அதிபர் பார்லென் வையாபுரி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மலேசிய முன்னாள் அமைச்சர் தத்தோ பி.கமலநாதன், பப்புவா நியூ கினியா நாட்டைச் சேர்ந்த மாகாண கவர்னர் சசிந்தரன் முத்துவேல் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.