தோட்டத் தொழிலாளர்களுக்கு 5000 ரூபா வழங்க முடியாது

0
49

பெருந்தோட்டங்களில் தற்பொழுது நிலவுகின்ற முறை, மாற்றம் பெறாத வரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 5,000 ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 5,000 ரூபாவை பெற்றுக் கொடுக்கும் முகமாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (11) தொழில் அமைச்சில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட கம்பனிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த பெருந்தோட்ட கம்பனிகளின் அதிகாரிகள்.

கடந்த காலங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதன் காரணமாக கம்பனிகளுக்கு உற்பத்தி செலவானது பாரிய அளவில் அதிகரித்துள்ளது.

அதே போல உலக சந்தையில் தற்பொழுது தேயிலையின் விலை அதிகரித்திருந்தாலும் அதன் பலனை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு பெற்றுக் கொள்ள முடிவதில்லை. அதனை இடைத்தரகர்களே பெற்றுக் கொள்கின்றனர். எனவே இவ்வாறான ஒரு நிலையில் பாரிய தொகையை வழங்குவது என்பது முடியாது காரியமே.

தற்பொழுது நாட்டில் இரசாயன உரத்திற்கான தட்டுப்பாடு நிலவுவதால் தேயிலை செடிகளுக்கு உரிய நேரத்தில் இரசாயன உரங்களை பெற்றுக் கொடுக்க முடியாத நிலைமை காரணமாக தேயிலை உற்பத்தியிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என சேவைகள் வழங்கும் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் மங்கள யாபா இதன்போது சுட்டிக் காட்டினார்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாகவும் பெருந்தோட்டங்களில் விளைச்சலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாகவும் இந்தளவு பாரிய ஒரு தொகையை எந்த காரணம் கொண்டும் பெருந்தோட்ட கம்பனிகளால் செலுத்த முடியாது நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மங்கள யாபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு விகிதத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை பெற்றுக் கொடுக்க முடியுமா? என அமைச்சர் இதன்போது கம்பனிகளிடம் வினவிய பொழுது எந்த காரணம் கொண்டும் ஒரு சிறு தொகையை கூட வழங்க முடியாது என கம்பனிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேலை இன்று நடைமுறையில் இருக்கின்ற இந்த நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும். எவ்வாறான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை கம்பனிகளால் முன்வைக்க முடியும். அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் இலாபத்தை பெற்றுக் கொண்டு தொழிலாளர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க முடியும் என கம்பனிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பனிகளால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதாக இதன்போது தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் அமைச்சருடன் தொழில் அமைச்சின் செயலாளர் மாபா பதிரண, தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here