Sunday, December 8, 2024

Latest Posts

இனவழிப்புக்கான நீதி தமிழர்களின் தன்மானத்தில் தங்கியுள்ளது: ஒன்றாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர்

ஈழ இனவழிப்புக்கான நீதியை வென்றெடுப்பதில் உலகத் தமிழர்களின் தன்மானமும், பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்ற வரலாற்றுப் பணிக்கு தமிழ்நாடு முதன்மையான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் இந்திய தமிழ்நாட்டில் இடம்பெற்ற அயல் உறவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரின் தொன்மையைக் கீழடியும், கந்தரோடையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகம் கண்டு, எழுத்தறிவு பெற்ற மக்கள் கூட்டத்தின் வழிவந்தவர்கள்.

தமிழர்கள் கொத்துக் கொத்தாக கேட்பார் யாருமின்றி படுகொலை செய்யப்பட்டதன் குறியீடாக ’முள்ளிவாய்க்கால்’ அமைந்துள்ளது.

உலகம் எங்கும் 700 கோடிபேர் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டில் தான் 2009 இல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று 18 பேர் தீக்குளித்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த நினைவுகளை கனத்த இதயத்துடன் சுமந்துகொண்டு தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் உலக எங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் சார்பில் எனது அன்பை நன்றியையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

நான் கனடா நாட்டு ஒண்டாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினராக உங்கள் முன் இங்கே நின்று கொண்டிருந்தாலும் நான் பிறந்து வளர்ந்தது மேற்சொன்ன கந்தரோடையும், முள்ளிவாய்க்காலும் அமைந்திருக்கும் ஈழ தேசம் தான்.

எனது பூர்வீகம் என்று கம்பீரமாக செல்வதில பெருமை கொள்கின்றேன்.

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கை தாயகமாகக் கொண்ட, அரைநூற்றாண்டுக்கும் மேலாக சபிக்கப்பட்டவர்களாக வாழ்ந்துவரும் இலட்சகணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்.

இன்றும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர் தேசத்திற்காகவும் தம் குரலை அணைவிடாமல் வைத்திருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் 80களில் மாணவத் தலைவர்களில் ஒருவராக நானும் இருந்து இலங்கை அரசின் இனவழிப்பினால் நாட்டை விட்டு உலகம் முழுவதும் சிதறி ஓடிய இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களில் நானும் ஒருவன்.

புலம்பெயர்ந்து கனடா தேசத்தில் தஞ்சமடைந்தேன் இன்று உங்கள் முன்னால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நிற்கும் நிலைக்கு கனடா எனக்காக அனைத்து உரிமைகளையும் அங்கீகரித்துள்ளது.

இது என் ஒருவனின் கதையல்ல, என்னைப் போல் பல இலட்சக்கணக்கில் அகதிகளாக உலக நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களின் கதையாகும். இந்த மண்ணிலும் நம் சகோதர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் குடியுரிமை கேட்டு தலைமுறை தலைமுறையாக காத்திருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும் போது ஒருவகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

கனடாவின் குடிமகனாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் உங்கள் முன் நிற்கிறேன்.

உலக வரலாற்றில் முதல் தடவையாக என்னைப் போன்ற கனடா வாழ் மக்கள் அனைவரதும் முயற்சியோடு தமிழ் மரபுத் திங்கள் கனடா தேசத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை உலகத் தமிழர்களுக்கு கிடைத்துள்ள வரலாற்று மிக்க அங்கீகாரமும் சாதனையுமாகும்.

அத்துடன், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை கனடா ஏற்றுக்கொண்டமைக்கு முன்னோடியாக தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்திற்கு தமிழக மக்கள் கொடுத்த பேராதரவுக்கும் நமது தோழமை கலந்த நன்றி உணர்வை இந்தச் சிறப்பு நாளில் வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

இந்த சாதனைகளையும், வெற்றிகளையும் தாண்டி 21 ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் கூட்டமாகவும் நம் இனம் இருந்து வருகிறது.

இது நமது தொன்மைக்கும் பண்பாட்டுச் செழுமைக்கும், நாகரிகத்திற்கும், 100 மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழர்களினத்திற்கும் விடப்பட்டிருக்கும் சவால் ஆகும்.

இதற்கு அண்மைய சாட்சியாக முல்லைதீவு மாவட்ட நீதிபதி சரவணராசா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அவர் குடும்பத்தோடு தலைமறைவாகும் சூழல் உருவாகி இருக்கிறது .

தமிழ் நீதிபதிக்கு கூட அங்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எமது தாய்நாடு இரையாகிக் கொண்டிருக்கிறது.

தமிழன் சறுக்கி விழுந்தாலும் ஒன்றுபட்ட உணர்வுடன் பீனிக்ஸ் பறவை போல் எழுந்தான் என்ற வரலாற்றை நாம் படைக்க வேண்டும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்நாட்டுப் புலவன் கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப உலகமெங்கும் சிதறி வாழ்கின்ற நாம் ஒரு நாடற்றவர்களாகி இனமழிந்து போகின்ற நிலைக்கு ஆளாவிடக்கூடாது.

அதற்கு எம் தாய் தமிழ்நாடு துணை நிற்க வேண்டுமென எமது தாய் நிலத்திலே கண்ணீரோடு காத்திருக்கும் எமது உறவுகளின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

இனவழிப்புக்கு உள்ளான தமிழினம் நீதியை வென்றெடுப்பதில்தான் உலகத் தமிழர்களின் தன்மானமும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும். அந்த வரலாற்றுப் பணிக்கு தமிழ்நாடு முதன்மையான பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.