அயோத்தியில் இராமர் சிலை இன்று பிரதிஷ்டை

0
44

இந்தியாவில் உத்தரபிரதேஸ் மாநிலத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அயோத்தி இராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று (22) நடைபெறும் நிலையில் இராம ஜென்ம பூமியில் காலை முதல் பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16ஆம் திகதி தொடங்கின.

6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்த நிலையில், 7ஆவது நாள் பூஜையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான, இராமர் சிலை பிரதிஷ்டை அபிஜித் முகூர்த்த நேரத்தில் நடைபெறும். 12.05 மணி முதல் 12.55 மணி வரையிலான நேரத்தில் இராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது.

மிகவும் நல்ல நேரமான 12.29 முதல் 12.30 மணி வரை இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அப்போது ஹெலிகொப்டர்கள் மூலம் கோயிலில் மலர்கள் தூவப்படவுள்ளன.

இந்திய பிரதமர் முன்னிலையில் இந்த பிரதிஷ்டை நடைபெறுவதால், 11 நாட்களாக கடும் விரதத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

பிரதிஷ்டையின்போது, சடங்குகளை முன்னின்று நடத்த நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில் இருந்து 14 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உரையாற்றுவர் 2.10 மணி அளவில் ராம ஜென்மபூமி வளாகத்தில் உள்ள சிவன் கோயிலில் பிரதமர் வழிபடுகிறார்.

ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க 8,000 இற்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இசைஞானி இளையராஜா பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து ரஜினிகாந்த், தனுஷ், TCS என்.சந்திரசேகரன், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் பிரதமருடன் சிறப்பு விருந்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

விழா முடிந்து பிரதமர் 3.30 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here