போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய சிசிரிவி கமராக்களைப் பயன்படுத்திய வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் 610 போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் சிசிரிவி பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 22 ஆம் திகதி முதல் கொழும்பு நகரின் வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி பாதுகாப்பு கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறியும் வேலைத்திட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த வேலைதிட்டதின் படி கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 610 வாகன சாரதிகள் பொலிஸ் சிசிரிவி பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
வழித்தடத்தை மாற்றுதல், சமிக்ஞை விளக்குகளின்படி வாகனம் செலுத்தாமை, வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துதல், சிவப்பு விளக்குகளை ஒளிரவிட்டு வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் இனங்காணப்பட்டுள்ளன.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.