Thursday, May 2, 2024

Latest Posts

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவேன்! – அமெரிக்காவிடமும் ரணில் உறுதி!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தியே தீருவேன் என்று அமெரிக்காவிடமும் உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்டுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

நாடு எதிர்நோக்கும் மிகவும் கடினமான சூழ்நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆதரவுக்கு இதன்போது ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார் என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு தமது அரசு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், எழுந்துள்ள பிரச்சினைகளுக்கான அவசர தீர்வுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என விக்டோரியா நூலாண்ட் சுட்டிக்காட்டினார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது உட்பட அது தொடர்பில் சிறிய கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

அதிகரித்து வரும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அமெரிக்கா அதற்கு தனது முழு ஆதரவையும் வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.