ரணிலுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.சிறீதரன் ஆகியோர் இன்று சனிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரட்னாயக்கவுக்கு சந்திப்பின் போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதம் மற்றும் மேலதிக தகவல்களை தருமாறும் ஜனாதிபதி சிறீதரனிடம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ராஜா என்ற இயற்பெயர் கொண்ட சாந்தன், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனினும், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், அவருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் கிடைத்த பின் அனுப்புவதற்கான நடைமுறைகள் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சாந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சாந்தனுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு அவதியுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.