இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (04-02-2023) பகல் 11 மணியளவில் இரணைமடுச் சந்தியில் இருந்து ஏ-09 வழியாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட்ட இப்போரட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் யாழ்மாநகர சபை மேயர் மணிவண்ணன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், யாழ்பகலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் என ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்போரட்டத்தை தடுக்கும் வகையில் 154 ம் கட்டைப்பகுதியில் வைத்து பொலிசார் விசேட அதிரடிப்படை, கலகத் தடுப்பு பொலிசாரல் வீதித்தடை ஏற்படுத்தப்பட்டதையடுத்து பொலிசாருக்கும் போரட்டக்காரர்களுமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிசாரால் தண்ணீர் தாரை மற்றும் கண்ணீர் புகை என்பன போராட்டக் காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதுடன் போராட்டக்காரர்கள் மீதும் பொலிசாரால் மிலேச்த்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது பொலிசாரல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து கைதுசெய்யபட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி குறித்த போராட்டமானது நான்கு மணிநேரமாக இடம்பெற்றதுடன் இருதரப்புக்களின் இணக்கப்பாட்டையடுத்து
பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சட்டவைத்திய அதிகாரியின் முன் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.