Thursday, December 5, 2024

Latest Posts

நாளைய தினம் பாராளுமன்றில்…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நாளை (07) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (06) நடைபெற்றதுடன், தேவி பாளிகா கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.

அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (07) மு.ப 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார்.

விருந்தினர்கள் நாளையதினம் மு.ப 09.45 மணிக்குள் தங்கள் இருக்கைகளில் அமருமாறு கோரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருடைய பாரியாரின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் தினேஷ் குணவர்தன வருகையும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முதற்பெண்மணியின் வருகையும் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பார்கள்.

அதனைத் தொடர்ந்து, படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கொழும்பு தேவி பாளிகா கல்லூரியின் மாணவியர் ஜயமங்கல கீதம் இசைக்கவுள்ளனர்.

இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி மு.ப 10.25 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் பிரதிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர்.

சபைக்குள் நுழையும்போது பிரதிப் படைக்கல சேவிதர் ‘ கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.

சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார். இதன்போது சபாநாயகர், பாராளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை 08ஆம் திகதி மு.ப 9.30 மணிவரை ஒத்திவைக்கப்படும். சபை ஒத்திவைக்கப்பட்டதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார்.

விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் இலத்திரனியல் முறையில் (E – Invitations) அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.