எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி எடுத்த தீர்மானத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தீர்மானம் எடுக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திலோ அல்லது அமைச்சரவையிலோ இதுவரையில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
பெற்றோல் மற்றும் டீசல் விலையை அதிகரிப்பதற்கு IOC நிறுவனம் அண்மையில் நடவடிக்கை எடுத்தது.எனினும், பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சீமெந்து தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நிதியமைச்சு, மத்திய வங்கி மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றுக்கு சீமெந்து தட்டுப்பாட்டைப் போக்க தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதிதாக ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீமெந்து தட்டுப்பாடு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என சுட்டிக்காட்டிய அமைச்சர், திட்டங்களை ஆரம்பிக்கும் முதல் கட்டத்தில் சீமெந்து அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.