இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி இன்று பிரதான உரை!

0
164

இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரீமியர் (Premier) ரோஜர் குக்கிற்கும் (Roger Cook) இடையிலான சந்திப்பு இன்று (09) பேர்த் நகரில் நடைபெற்றது.

இலங்கைக்கும் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், இலங்கைக்கும் பேர்த் நகருக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்துவதற்கும் பிரீமியர் (Premier) ரோஜர் குக் இணக்கம் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் காணப்படும் சாத்தியக்கூறுகளை விவரித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறும், இலங்கைக்கு விஜயம் செய்து, இந்நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரீமியர் (Premier) ரோஜர் குக்கிற்கு அழைப்பு விடுத்தார்.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தில் மேற்கொண்டுள்ளதோடு ஏழாவது இந்து சமுத்திர மாநாடு இன்றும் (09) நாளையும் (10) அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது.

“நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) பிரதான உரை ஆற்றவுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (08) பிற்பகல் பேர்த் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here