பொருட்களின் விலைப்பட்டியலை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்துவதை காட்டிலும் அத்தியாவசிய பொருட்களின் விலையினை மாத்திரம் காட்சிப்படுத்துவது சிறந்ததாக அமையும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அத்தோடு பொருட்களின் விலை பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுப்பட்ட வகையில் காணப்படுவது குறித்து அவதானம் செலுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்தியாவசிய பொருட்களை நுகர்வோருக்கு தடையின்றி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது கூட்டம் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் இன்று நிதியமைச்சில் இடம்பெற்றது.
புத்தாண்டு காலத்தின் போது ஆடைகள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை தடையின்றி விநியோகிப்பது குறித்து இக்கூட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியின் போது வர்த்தகர்களுக்கு வரிச்சலுகை விலக்கு வழங்கப்பட்டுள்ளபோதும் அதன் பயன் நுகர்வொருக்கு கிடைக்காமலிருப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுப்பட்ட விலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நிதயமைச்சரிடம் எடுத்துரைத்தார்.
விலையேற்றத்தினாலும், விலைமாறுப்பாட்டினாலும் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். இப்பிரச்சினைக்கு முறையான தீர்வை முன்வைப்பது அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
விலைப்பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்ற சட்டம் நாட்டில் செயற்பாட்டில் இல்லை.வியாபாரிகள் தங்களின் விருப்பத்திற்கமைய பொருட்களின் விலையை நிர்ணயித்து விற்பனை செய்கிறார்கள் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நிதியமைச்சரிடம் குறிப்பிட்டார்.
பொருட்களின் முழுமையான விலைப்பட்டியலை மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்துவதற்கு பதிலாக அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை மாத்திரம் காட்சிப்படுத்தும் முறைமையினை தயார் செய்யுமாறு உரிய தரப்பினருக்கு நிதியமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
நுகர்வோர் அதிகார சபை ஊடாக நாளாந்தம் நாடுதழுவிய ரீதியில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்து அறிக்கை பெற்றுக்கொள்ளும் வழிமுறையை செயற்படுத்துவது அவசியமாகும்.தற்போதைய வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினை தற்காலிகமானது என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.