Sunday, September 8, 2024

Latest Posts

இணைய பாதுகாப்புச் சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

இலங்கையின் நாடாளுமன்றம் உயர் நீதிமன்றத்தின் பரிந்தரைககைளை புறந்தள்ளி, இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

மிகவும் சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்புச் சட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி தனிப்பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் உயர் நீதிமன்றம் இது  நாடாளுமன்றாத்தில் மூன்றில் இரண்டு பெருமான்மையினால் நிறைவேற்றப்பட வேண்டுமென  கூறியிருந்தது.

”இணையதள பாதுகாப்புச் சட்டத்தை கவனமாக ஆராய்ந்த பின்னர், அதிலுள்ள பல பிரிவுகள்  உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைவாக இல்லை என்பதும் அதில் பல அம்சங்கள் விடுபட்டுள்ளன” என்பதையும் அவதானிக்க முடிவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழு கூறுகிறது.

உயர்நீதிமன்றத்தின் உத்தவிற்கு அமையவே இந்த இணையதள பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்து மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த விடயத்தை ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சட்டமூலத்திற்கு எதிராக 51 மனுக்கள்  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி தீர்ப்பை அறிவித்தது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஊடக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ செயற்பாட்டுக் குழுக்கள் உட்பட பலர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவ்வகையில் “மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரமே இந்த மசோதாவை சட்டமாக நிறைவேற்ற முடியும்” என் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அது மாத்திரமின்றி அந்த சட்டத்தில் திருத்தங்கள் தேவைப்பட்டால் அதை தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற முடியுமெனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்ததாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது அந்த மசோதாவிலுள்ள 56 பிரிவுகளில் 31 திருத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் கண்டறிந்திருந்தது. எனினும், இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என ஆணைக்குழு கூறியுள்ளது.

சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், இணையதள பாதுகாப்புச் சட்டத்திலுள்ள தொழில்நுட்ப ரீதியிலான தவறுகளை ஆணைக்குழு விபரித்துள்ளது. “அந்த மசோதாவில் இருந்த 30 பிரிவுகள்  அரசியல் சாசனத்தின் பிரிவு 12 (1) இசைவாக இல்லை, மேலும் சில அம்சங்கள் பிரிவு 14 (1) (அ) ஆகிய பிரிவுகளுக்கு எதிராக உள்ளன” எனக் கூறியுள்ளது. அந்த திருத்தங்கள் செய்யப்படாத நிலையில், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு ஏற்ற வகையில் அந்த சட்டம் இயற்றப்படாமை குறித்து ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக ஏற்று அதை செயல்படுத்த தவறியமை, அந்த சட்டத்தின் தற்போதைய வடிவம் குறித்தும், நாடாளுமன்றத்தில் தேவையான அளவிற்கு வாக்குகளை பெறாமை குறித்தும் ஆழ்ந்த கவலை எழுகிறது” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் எல் டி பி தெஹிதெனிய கூறியுள்ளார்.

”ஆக்கபூர்வமாக நிறுவன ரீதியாக சீர்த்திருத்தங்களை முன்னெடுப்பதில் ஈடுபடாமல், இதை முன்னெடுத்துச் செல்லுவது குறித்து நாங்கள் அரசை எச்சரித்திருந்தோம்” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கையில் “கருத்துச் சுதந்திரத்தை நசுக்கவும், எதிர்ப்புகளை ஒடுக்கவும் அரசின் ஆயுதங்களில் புதிதாக சேர்ந்துள்ள ஒரு விடயம்.” இதுவென விமர்சித்துள்ளது.

அதேபோன்று அப்பிள், அமெசான், கூகள் மற்றும் யாஹூ போன்ற அமைப்புகளை உறுப்பினராகக் கொண்டுள்ள ஆசிய இணையதள கூட்டமைப்பு இந்த சட்டத்தில் பரந்துபட்ட திருத்தங்கள் தேவை எனவும், இந்த சட்டமானது நாட்டிற்கு வரக்கூடிய முதலீடுகளை பாதிக்கும் எனவும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.