உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கே நடுங்கிய அரசு, சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமா? நிறைவேற்று அதிகார அரச தலைவர் பதியை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் முயற்சி வெற்றியளிக்காது – இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது- அரச தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசமைப்பில் இடமில்லை. எனினும், இதற்கான முயற்சி குறுக்கு வழியில் இடம்பெற்றால் அதனை எதிர்ப்போம். வீதியில் இறங்குவோம். ஜே.வி.பி. பிரச்சினையின் போது கூட அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. எனவே, நவம்பர் மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.
நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபெரும்பான்மைப் பலமும், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். இந்த அரசு சாதாரண பெரும்பான்மை இல்லாது தள்ளாடும் நிலையிலேயே உள்ளது- என்றார்.