குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது, அபேசேகரவின் கூற்றுக்கள் தொடர்பில் புதிய சுயாதீன விசாரணையை ஆரம்பிக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அபேசேகரவின் கூற்றுகளுடன், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் மேலதிக விசாரணைகள் தேவை என்று முடிவு செய்துள்ளதாக விவாதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தேர்தல் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும் இன்றுவரை இந்த விசாரணைகள் இந்த அரசாங்கத்தால் முடிக்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டால், அக்காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்பு எந்திரத்தை கட்டுப்படுத்திய ஜனாதிபதியால் கட்சி எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்ட முடியும் எனவும் ஐ.தே.க உறுப்பினர்கள் உறுதியாகக் கூறினர்.
2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்களிடம் இருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது, அப்போதைய அரசாங்கம் அச்சுறுத்தல்கள் பற்றி அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறினர்.
அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்படி, அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் அறிந்திருந்த போதிலும், சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தடுத்துள்ளனர்.
மேலும், 2019 ஜனவரியில் தமது விசாரணைகள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு சபைக்கு விளக்கமளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்ததாகவும் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் அபேசேகர கூறியுள்ளார்.