இவ்வருடம் நீர்க் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இல்லை எனத் தெரிவித்த நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், உத்தேச நீர் சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்;
“இந்த ஆண்டு நீர் கட்டணத்தை அதிகரிக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்த குடிநீர் கட்டண சூத்திரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. ஆனால் நாங்கள் இன்னும் தயாரிக்கப்பட்ட நீர் சூத்திரத்தைப் படித்து வருகிறோம். நீர் கட்டண சூத்திரம் மூலம் மக்கள் மீது தேவையற்ற சுமையை திணிக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை..” எனத் தெரிவித்திருந்தார்.