Sunday, January 19, 2025

Latest Posts

இந்திய-இலங்கை மீனவர் நெருக்கடி: இரு தரப்பிலும் எதிர்ப்பு வலுப்பது ஏன்?

இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, எல்லை மீறிய இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய மீனவர்களும் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

“இலங்கையிலுள்ள நீதிமன்றத்தினால் அரசியல் அமைப்பில் உள்ள சட்டத்திற்கு ஏதுவாகவே வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக இந்திய மீனவர்கள் இரண்டு, மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அச்செயலானது எவ்வித அடாவடித்தனமான செயலாக தென்படவில்லை. எல்லைக்குள் அத்துமீறி வந்தமையாலேயே அவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய தேவை வந்துள்ளது,”  யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீகந்தவேள் புனிதப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை மீறும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை கடல் எல்லையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 4) கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்தாக யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஏக மனதாக தீர்மானித்துள்ளதாக அவர் இந்த ஊடக சந்திப்பில் அறிவித்தார்.

எல்லை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்தை கோரும் இந்திய அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஸ்ரீகந்தவேள் புனிதப்பிரகாஷ் இந்த ஊடக சந்திப்பில் வலியுறுத்தினார்.

“சில இந்திய அரசியல் தரப்புகள் எமது அரசாங்கத்துடன் பேசி அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார்கள். இது எந்த வகையிலும் நியாயமான செயற்பாடாக தென்படவில்லை.  இதுபோல செயற்பாடுகள் இங்கு இடம்பெறுமானால் எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகவே போய்க்கொண்டிருக்கும் என்பதை எமது இலங்கை அரசாங்கமும் கணக்கில் எடுக்க வேண்டும்.”

இலங்கை மீனவர்களை காப்பாற்ற வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு இலங்கை கடற்படை மற்றும் நீதித்துறைக்கு காணப்படுவதாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீகந்தவேள் புனிதப்பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று மீனவர்களுக்கு சிறை

இலங்கை கடல் பரப்பில் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட, இரண்டு படகுகளையும் அதிலிருந்து 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினரால் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது  23 மீனவர்களில் 20 மீனவர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், இரண்டு விசைப் படகு ஓட்டுநர்களுக்கு தலா ஆறு மாத காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதேபோல் இலங்கை கடற்படையால் 2019ஆம் ஆண்டு எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர் ஒருவர், அதேத் தவறை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

இலங்கை கடற்படை கைது செய்யும் தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த இராமேஸ்வரம் மீனவர்கள், இந்த  வருட கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்தனர்.

மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதை கண்டித்தும், மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுடமையாக்குவதை  கண்டித்தும், 700ற்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 18ஆம் திகதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

மேலும் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்குச் சென்ற, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் மீனவர்களுக்கு சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் நேற்றைய தினம் (பெப்ரவரி 25) முடிவுக்கு வந்தது.

முற்றுகைப் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகள் எல்லைமீறி இலங்கையின் வடக்கு கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து, வடக்கு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை முற்கையிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுத்தன.

இந்திய துணை உயர்ஸ்தானிகரிடம் தமது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்திய மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கைகள் அடங்கிய மஜரையும் கையளித்தனர்.

“நாங்கள் இந்திய இழுவைப் படகால் சாகப்போகின்றோம். இது தொடர் போராட்டமாகத்தான் மாறப்போகிறது. ஒரு சில நாட்களில் முடிவு தரவேண்டும். தராத பட்சத்தில் தொடர் போராட்டம் ஒன்று நடக்கும். கடலில் அசம்பாவிதங்களும் நடக்கும்” என யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அத்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் இதன்போது எச்சரித்திருந்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.