நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும் நுகர்வோர் உரிமைகளையும் பாதுகாப்பது பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சமகி ஜன பலவேகய மற்றும் சமகி ஜன சன்தானய ஆகியவற்றின் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக நிலக்கரி தரமற்றது எனக் கூறப்பட்டு வந்த நிலையில், 10வது கப்பலில் கொண்டு வரப்பட்ட நிலக்கரியும் தரமற்றது என இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மின்சார அமைப்பு கட்டுப்பாட்டு அலகின் அறிக்கைகள் மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிக்கைகளின் அடிப்படையில், 9 மற்றும் 10வது கப்பல்களில் வந்த நிலக்கரி தரமற்றதாக இருப்பது தெரியவந்துள்ளது.
உற்பத்தி திறன் 300 மெகாவாட் இருக்க வேண்டிய நிலையில், முதல் யூனிட்டில் 263 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகி வருவதுடன், மூன்றாவது யூனிட்டிலும் சுமார் 275 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் நிலக்கரி தரமற்றது என்பது தெளிவாகிறது என்றும், இரண்டாவது யூனிட்டில் பயன்படுத்தப்படுவது ரஷ்ய நிலக்கரி என்பதால் அங்கு சரியாக 300 மெகாவாட் உற்பத்தியாகிறது என்றும் அவர் கூறினார். இதன் மூலம் சமகி ஜன பலவேகய தொடர்ந்து முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையெனத் தெரியவருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலைமைக்கு காரணம் அரசு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததே என்றும், இதுபோன்ற சூழ்நிலையில் அரசு அவசர கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். அவசர கொள்முதலுக்கான காரணமும் தரமற்ற நிலக்கரி இறக்குமதியே என அவர் குற்றஞ்சாட்டினார்.
நுரைசோலை அனல் மின் நிலையம் தொடர்பான அறிக்கைகள் குறித்து அரசு கவனம் செலுத்தவில்லை என்றும், இந்த நிலக்கரி மோசடிக்கு அரசு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இன்றும் நாட்டுக்கு கொண்டு வரப்படுவது தரமற்ற நிலக்கரிதான் என்றும், இதற்கான காரணங்களை அரசு விளக்க வேண்டும் என்றும், இதன் நன்மை எரிபொருள் மாஃபியாவிற்கே சென்றடைகிறது என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
இந்த கருத்துகளை அவர் கடந்த 28ஆம் திகதி சமூக ஊடகங்கள் வழியாக வெளியிட்ட விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
