நாடாளவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் 40 தொழிற்சங்கங்கள் குதித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசியச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அவதானிகள் எச்சரிக்கின்றனர்.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கல்வி, சுகாதாரம் மற்றும் அரச நிர்வாகத் துறைகள் வெகுவாகப் பாதிப்படைந்தள்ளன. இதனால் மக்கள் தமது தேவைகளை நிறைவேற்ற முடியாது நெருக்கடிளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மார்ச் 9 முதல் 15 வரை தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்குத் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதென தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் கடந்த செவ்வாய்க்கிழமையே அறிவித்திருந்தது. அதற்கமைய அரசின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (9) வியாழக்கிழமை முதல் முன்னெடுக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதாரத்துறை, மின்சார சபை அதிகாரிகள் சங்கம், பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கள் இதில் பங்கேற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அனைவரும் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை விரிவுரைகளைப் புறக்கணித்துள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றுப் புதன்கிழமை நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் தாதிகள் தவிர்ந்த ஏனைய மருத்துவ துறைசார் ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அனைத்து நோயாளர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
N.S