நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 45 வீதமான பங்கு நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது.
அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரியை கொண்டு வருவதற்காக ரஷ்ய துறைமுகத்தை சென்றடைந்துள்ள கப்பலுக்கான கடன் கடிதத்தை திறந்துகொள்ள முடியாமையால் நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்தது.
60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியை கொண்டு வருவதற்காக குறித்த கப்பல் ரஷ்யாவிற்கு சென்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் மேலதிக பொது முகாமையாளர் அன்ரூ நவமணி தெரிவித்தார்.
குறித்த கப்பல் நேற்று ரஷ்யாவின் வனினோ துறைமுகத்தை சென்றடைந்ததுடன், ஐந்து நாட்களில் கப்பலுக்கு நிலக்கரி ஏற்றப்படவுள்ளது.
கடன் கடிதத்தை திறப்பதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்காக வர்த்தக வங்கிகள் சிலவற்றுடன் இலங்கை நிலக்கரி நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்ரூ நவமணி தெரிவித்தார்.
மேலும் ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் இருப்பதுடன், அந்த காலப்பகுதிக்குள் புதிய நிலக்கரி தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட பருவ காலத்திற்குள் நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாது போகும் பட்சத்தில், ஏப்ரல் மாதத்திற்குள் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் நெருக்கடிக்குள் தள்ளப்படுவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்படும்.
இதனிடையே, எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு வழங்கும் திகதிகள் தொடர்பில் அண்மையில் கருத்துகளை வௌியிட்ட எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே மீண்டும் அதேபோன்றதொரு கருத்தை வௌியிட்டார்.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையாகும் போது எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்காமல் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் கூறினார்.
மின்சக்தி அமைச்சின் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான டீசல் மற்றும் எண்ணெயை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காமினி லொக்குகே குறிப்பிட்டார்.
மார்ச் 15 ஆம் திகதிக்கு பின்னர் இந்திய கடன் உதவியின் கீழ் டீசல், பெட்ரோல், விமானங்களுக்கான எரிபொருள் ஏற்றிய 8 கப்பல்கள் வரவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, பெட்ரோலிய மொத்த களஞ்சிய முனையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.D.சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட நாலக்க பெரேரா இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெட்ரோலிய மொத்த களஞ்சிய முனையம் இலங்கைக்குள் எரிபொருளை விநியோகிக்கும் முக்கிய நிறுவனமாகும்.
சந்தைக்கான 92 வீத எரிபொருள் விநியோகம் பெட்ரோலிய மொத்த களஞ்சிய முனையத்தின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.