ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடல் வரை சென்று மீன்பிடித்து கரைக்கு திரும்பினர்.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி 27-ந் திகதி மீனவர்கள் ரமேஷ்(வயது 40), ரோடிக்(19) அஜித் (25), கொலம்பஸ் (52), இமான் (22), லின்சன் (23), பவுத்தி (19), இஸ்ரேல் (20) ஆகிய 8 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இவர்கள் 8 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மீன்பிடிப்பதற்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைதான மீனவர்களை, படகுடன் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் 8 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, கைதான 8 மீனவர்களையும் மார்ச் 11-ந் திகதி (இன்று) வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அவர்கள் 8 பேரும் கிளிநொச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரின் வழக்கை இன்று விசாரித்த இலங்கை நீதிமன்றம், அவர்களை வரும் 14-ந் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.