பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகு இன்று (16) திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அது தொடர்பான விடயங்களை தௌிவுப்படுத்தும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், குறித்த மீன்பிடி படகில் 123 கி.கி ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 300 மில்லியன் என்றும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்ட நீண்டநாள் மீன்பிடி படகு இன்று (16) காலை 5 சந்தேகநபர்களுடன் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
