Friday, April 26, 2024

Latest Posts

இந்தியா செய்துள்ள உதவி உலக அளவு பெரியது – நன்றி மறக்கக்கூடாது என்கிறார் திகா   

இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து மிகவும் இக்கட்டான நிலையை அடைந்துள்ள காலகட்டத்தில்  இந்தியா வழங்கியுள்ள கடன் உதவி மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று என தொழிலாளர் தேசிய சங்த்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் செய்த இந்த உதவியை ஒருபோதும் இலங்கை மறக்கக்கூடாது எனவும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பிலும் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் சார்பிலும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர்,

“நமது நாடு பொருளாதார ரீதியில் பாரிய சிக்கலை சந்தித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய டொலர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் மக்கள் எரிபொருளுக்கும், சமயல் எரிவாயுவிற்கும் ஏனைய அத்தியாவசிய பொருட்களுக்கும் வரிசையில் நிற்பதை காண முடிகிறது. நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும் எமது நாட்டிற்கு தந்தை நாடான இந்தியா நேற்றைய தினம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

உண்மையில் எத்தனை நாடுகள் இலங்கைக்கு உதவி செய்திருந்தாலும் நமது நாடு வீழ்ச்சியின் விழிம்பில் இருக்கும் போது  நாட்டை மீட்க செய்யப்படும் உதவியானது உலக அளவிற்கு பெரிதாக மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அந்த வகையில் இந்தியா எமக்கு செய்துள்ள உதவியை நாங்கள் உலக அளவு பெரியதாகவே கருதுகிறோம்.

ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவை பகைத்துக் கொண்டு எம்மால் முன்நோக்கி செல்ல முடியாது. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற முன்னாள் அமைச்சர்கள் இந்தியாவிற்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்தனர். இலங்கையில் இந்தியா அபிவிருத்திக்கு முதலீடு செய்யும் போது முந்திக் கொண்டு எதிர்ப்பு வௌியிட்டனர். ஆனால் இன்று என்ன நடந்துள்ளது? விழும் நிலையில் உள்ள நமது நாட்டை இந்தியா கைகொடுத்து தூக்கியுள்ளது. எனவே அரசியல் யதார்த்த நிலையை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.    

தற்போது டொலர் இன்றி தவிக்கும் நமது நாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ள 1 பில்லியன் அமெரிக்க டொலர் மிக்பெரிய உதவியாக இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யவும் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யவும் ஏனைய முக்கிய தேவைகளுக்கும் இந்த உதவி பயன்தர இருக்கிறது. எனவே இந்தியா புரிந்துள்ள இந்த அவசர உதவியை இலங்கை மக்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது. போலி இந்திய எதிர்பாளர்களிடம் இருந்து அவதானமாக இருக்க வேண்டும். இந்தியாவை பகைத்துக் கொள்ளாது நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். கடனுதவி மட்டுமல்ல இலவச உதவிகளையும் இந்தியா எமக்கு செய்துள்ளதை மறந்துவிடக் கூடாது. இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பிலும் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் சார்பிலும் இந்தியாவிற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.