ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக கையாண்டு, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதால் அவருக்கு ஆதரவளிக்க வேண்டியது அனைத்து தரப்பினரின் கடமை எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
“எமது நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்றே கூற வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்று சில மாதங்களில் எமது நாட்டை வழமைக்கு கொண்டு வந்தார்.
எதிர்காலத்தில் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்ற முடியாது.
பொருளாதார நெருக்கடியால் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறாத நாடுகள் இன்னும் மீளவில்லை.
எனவே, நாட்டை மீட்டெடுக்கும் ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்ற வகையில் அவருக்கு ஆதரவளிப்பது அனைத்து தரப்பினரின் கடமையாகும் என்பதை வலியுறுத்த வேண்டும்” என்றார்.