தொம்பே, மல்வான மாபிடிகம பிரதேசத்தில் காணியை வாங்கி அதில் பாரிய வீடொன்றை நிர்மாணித்து அரச நிதியை அபகரித்தமை தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகளை நடத்தப்போவதில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் கம்பஹா மேல் நீதிமன்றில் இன்று (25) அறிவித்துள்ளது.
நீதிமன்றில் உரையாற்றிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, முதலாம் சாட்சி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யாமையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், வழங்கப்பட்ட வாக்குமூலத்தில் கையொப்பம் இடப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் தெரிவித்தார்.
இதன்படி, இந்த வழக்கில் எதிர்காலத்தில் சாட்சியங்கள் எடுக்கப்பட மாட்டாது எனவும், வழக்கை முடித்து வைப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
அதனால் அழைப்பாணை மூலம் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான சாட்சிகள் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, மனுதாரர் வழக்கை முடித்துக் கொண்டுள்ள நிலையில், அந்த கோரிக்கை மீதான தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வழங்கப்படவுள்ளதால், தமது கட்சிக்காரர்களை விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.