நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் 53 மசாஜ் நிலையங்கள் சோதனையிடப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன.
அந்த மசாஜ் நிலையங்களின் பணிப்பெண்களில் இருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறையான அனுமதியின்றி மசாஜ் நிலையங்கள் இயங்கி வந்ததும் தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இயங்கும் 53 மசாஜ் நிலையங்கள் கடந்த வாரம் முதல் நீர்கொழும்பு பொலிஸாரால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி, பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா தலைமையில் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.
போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படும் “சவிய” நிகழ்ச்சியின் இடையே போதைக்கு அடிமையானவர்களில் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர் நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையங்களுக்கு வழமையாக செல்பவர் என தெரியவந்ததை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையங்களில் அவசர பரிசோதனை ஆரம்பமானது.
அந்தச் சோதனையின்போது, அந்த நிலையங்களில் மசாஜ் சேவையில் ஈடுபட்டிருந்த 120 இளம்பெண்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களில் இருவருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்களில் 15 வயதுடைய சிறுமி ஒருவரும் அடங்குவதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் இருந்து வௌியேறிய சிறுமியை இனந்தெரியாத நபரொருவர் மசாஜ் நிலையத்தில் விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த 15 வயது சிறுமியுடன் உடலுறவு கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டு மசாஜ் பணிப்பெண்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சோதனையை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பிரதேசங்களில் உள்ள அனைத்து மசாஜ் நிலையங்களையும் மூடுவதற்கு நீர்கொழும்பு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த மசாஜ் நிலையங்களின் விளம்பர பலகைகளை அகற்றவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த மசாஜ் மையங்களின் சட்டபூர்வமான தன்மை குறித்து நீர்கொழும்பு மாநகர ஆணையாளரிடம் கேட்டறிந்தோம்.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் சட்டரீதியாக எந்தவொரு மசாஜ் நிலையமும் நடத்தப்படவில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அதன்படி, மாநகர சபையின் அனுமதியின்றி இந்த நிலையங்கள் நடத்தப்படுவதால் இவற்றை ஒழுங்குபடுத்த முடியாது என மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும், உரிமம் இல்லாமல் இயங்கி சமுதாயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மசாஜ் நிலையங்களை ஆய்வு செய்து, சட்டத்தை அமுல்படுத்தியதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.