2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்தமை விஞ்ஞானப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வீடொன்றுக்குள் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவரை அடையாளங்காணும் நோக்கில் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
புலஸ்தினி மகேந்திரனின் தாயிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட DNA மாதிரியுடன் தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து பெறப்பட்ட எலும்புகளின் DNA மாதிரி பொருந்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2019 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் வீடொன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சாரா ஜாஸ்மின் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.