பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் உள்ள வீதித் தடுப்பில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகளுக்கும் மோட்டார் சைக்கிளில் வந்த பல இராணுவ வீரர்களுக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த காணொளியின் படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி நுழைவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் தடுப்புகளை மீறி இராணுவதினர் மோட்டார் சைக்கிள் மூலம் அணிவகுப்பு சவாரி ஒன்றை செய்ய முற்படுவதைக் காணமுடிந்தது.
இச் சம்பவம் தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்த கோரிக்கைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் அணியினரின் நான்கு மோட்டார் சைக்கிள்கள் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள வீதித் தடையை நெருங்கியபோது, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் (உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்) தகாத முறையில் நடந்துகொண்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் இராணுவத் தளபதிக்கு அறிவித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.
இதனடிப்படையில், மேற்படி சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு தேவையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.